செய்திகள்

பரமத்திவேலூரில் கார் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

பரமத்திவேலூரில் கார் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சக்தி (வயது 21). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

வெளியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று இரவு இவர் பரமத்தியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக நண்பர்கள் வேணுகுமார் ஜெயக்குமார் ஆகியோருடன் ஒரே மோட் டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த சக்தி சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சக்தி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் வேணுகுமார், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் குலசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.