செய்திகள்

பரமத்திவேலூர் அருகே ஆற்றில் மணல் திருட முயற்சி

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 ஜே.சி.பி.எந்திரங்கள், 10 மினி ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பாலப்பட்டி மற்றும் நன்செய் இடையார் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாமல் ஆற்றில் மணல் அள்ளி மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நள்ளிரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்த்தபோது அங்கு 2 ஜே.சி.பி.எந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் அள்ளி போட்டுக் கொண்டிருந்தனர். அனுமதி பெறாமல் திருட்டு தனமாக இங்கு மணல் அள்ளப்படுவதை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போலீசார், உடனடியாக அந்த 2 ஜே.சி.பி.எந்திரங்கள், மணல் லோடுகளுடன் இருந்த 2 லாரிகள், 10 மினி ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த வாகனங்கள் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கு வைத்து, அதன் டிரைவர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது போல் தொடர்ந்து அந்த பகுதி ஆற்றில் இருந்து மணல் அதிக அளவில் தினமும் திருடப்பட்டு வருதாகவும், போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, இந்த மணல் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT