புதுடெல்லி:
டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில், உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
சுமித் பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதக்க மேடையில் ஒலிக்கும் தேசிய கீதத்தை கேட்டு ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் ஜனாதிபதி கூறி உள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சுமித் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றதை எண்ணி தேசம் பெருமை கொள்வதாகவும், பாராலிம்பிக் தொடரில் இந்திய தடகள வீரர்கள் பதக்கங்களை குவித்து ஜொலிப்பதாகவும் கூறினார்.
பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.