சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், 10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடம் மற்றும் கடந்த திங்கட்கிழமை நடந்த 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாள்கள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக கூறப்பட்டது.
முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த சிபிஎஸ்இ, மறுதேர்வு நடத்த முடிவு செய்தது. இதுகுறித்து சிபிஎஸ்இ இணைய தளத்தில், 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி மற்றும் பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.
கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுதேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சி.பி.எஸ்.இ. மாணவர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில், இன்று காலை டெல்லி சிபிஎஸ்இ அலுவலகம் முன் மாணவர்கள் சிபிஎஸ்இ-க்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்டனர். 'சிபிஎஸ்இ செய்த தவறினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து தவறுக்கும் சிபிஎஸ்இ தான் காரணம். அவர்கள் கேள்வித்தாளை பாதுகாக்க தவறி விட்டனர். சிபிஎஸ்இ செய்த தவறினால் மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.