செய்திகள்

ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல்

ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

கொடுங்கையூர் தீ விபத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் உறவினர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீயை அணைக்கும் போது உயிர் பலி ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு துறையை நவீன மயமாக்க வேண்டும். தீயை அணைக்க தொழில் நுட்ப கருவிகள் வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் குரல் எழுப்புவேன். மேலும் இது போன்ற உயிர் இழப்பு ஏற்படாமல் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தீவிபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டேன். நடிகர் கமல ஹாசனுக்கு எதிரான கருத்துக்களை அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம் என்றார்.

ஓ.பன்னிர்செல்வத்துடன் மதுசூதனன், மா.பா.பாண்டியராஜன், மனோஜ்பாண்டியன், கே.பி. முனுசாமி, ராஜகன்னப்பன், ஆர்.எஸ். ராஜேஸ் ஆகியோர் சென்று இருந்தனர்.