செய்திகள்

தேவரின் தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் பதில்

தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்து உள்ளார்.

மாலை மலர்

மதுரை:

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.4½ கோடி மதிப்பில் 13½ கிலோ எடையிலான தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கினார்.

ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவின்போதும் தங்ககவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டன. அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாள் ஆகியோரின் பேரில் இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்தது.

துணை முதல்- அமைச்சராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி இன்று (28-ந் தேதி) தொடங்கி உள்ள நிலையில் தங்க கவசத்தை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 4 அமைச்சர்கள் மதுரையில் உள்ள வங்கிக்கு நேற்று மாலை வந்தனர்.

அவரிடம் தங்க கவசத்தை ஒப்படைப்பது குறித்து தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.சாமி, அன்பழகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மதுரை மாவட்ட கலெக்டரிடம் தங்க கவசத்தை ஒப்படைத்து தேவர் நினைவிடத்திற்கு எடுத்து செல்வது என்று இரு அணியினரும் ஒப்புதல் அளித்தனர்.

இதனால் மதியம் 3 மணியளவில் தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டு தேவர் நினைவிடத்தில் பொருத்தப்பட்டது.

தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கி பெட்டகத்தில் தங்க கவசத்தை வைக்கவும், எடுக்கவும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா எனக்குத்தான் அதிகாரம் வழங்கி இருந்தார்.

தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் மற்றும் அ.தி.மு.க. பொருளாளராக இருந்த நான் ஆகிய 2 பேரின் பெயரில் தான் இந்த தங்க கவச பெட்டகத்துக்கான வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.

இருவர் புகைப்படமும் ஒட்டப்பட்ட பாஸ்புக்கும் எங்களிடம் தான் இருக்கிறது. இந்த ஆவணங்களை வங்கி அதிகாரிகளிடம் காண்பித்தோம். ஆனால் எங்களிடம் தங்க கவசத்தை ஒப்படைக்கக்கூடாது என்று டி.டி.வி. தினகரன் தரப்பினர் வங்கி அதிகாரியிடம் கடிதம் கொடுத்தனர்.

இதன் முலம் பெட்டகத்தில் இருந்து தங்க கவசத்தை எடுக்க அவர்கள் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டனர்.

தினகரன் தரப்பினர் தேவர் தங்க கவசத்தை எடுத்து செல்வதில் ஆட்சேபனை இல்லை என்று முந்தைய நாள் கூறி விட்டு வங்கியில் வந்து பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள். எங்களது ஒப்புதலுடன் தான் தங்க கவசம் பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான தங்களிடம் பெற வேண்டும் என்று கூறி முட்டுக்கட்டை போட்டனர். இதனால் தான் தாமதம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினையை யாரும் தங்களது அரசியல் சுயலாபத்திற்கு பயன்படுத்திவிடக்கூடாது. தேவர் ஜெயந்தி விழாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது. வழக்கம் போல தேவர் ஜெயந்தி விழாவில் தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சுமூக முடிவு ஏற்படுத்தி தங்க கவசத்தை மதுரை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.வி. தினகரன் அணியின் அமைப்பு செயலாளர் ஆர்.சாமி கூறியதாவது:-

அ.தி.மு.க. இரு அணி நிர்வாகிகளிடமும் தங்க கவசத்தை ஒப்படைக்க முடியாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது. மேலும் வங்கி அதிகாரிகள் இரு ஆலோசனைகளை தெரிவித்தனர். நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறுவது, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் மாவட்ட கலெக்டரிடம் தங்க கவசத்தை ஒப்படைப்பது என்று கூறினர்.

இதில் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் தர நாங்கள் சம்மதித்தோம். பின்னர் மாவட்ட கலெக்டர் மூலம் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளிடம் வேண்டுகோள் கடிதம் பெறப்பட்டு தங்க கவசம் மதுரை கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எவ்வித முட்டுக்கட்டையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.