செய்திகள்

இந்தியாவின் அடுத்த கபில்தேவ் பாண்டியா தான்: இயன்சேப்பல் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கபில்தேவாக உருவாகி வருபவர் பாண்டியா என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சேப்பல் கூறியுள்ளார்.

மாலை மலர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ஹர்த்திக் பாண்டியா. சமீப காலமாக அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. இந்த தொடரில் 222 ரன்னும் எடுத்து, 6 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஹர்த்திக் பாண்டியா அடுத்த கபில்தேவாக உருவாவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன்சேப்பல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கபில்தேவ் ஓய்வு பெற்ற பிறகு வேகப்பந்து ஆல்-ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி ஏங்கி வந்தது. அந்த இடத்துக்கு ஹர்த்திக் பாண்டியா உருவாகி வருகிறார். அடுத்த கபில்தேவ் ஆவதற்கான அதிகமான சாத்தியங்கள் இருக்கிறது. ஆட்டத்தை மாற்றக் கூடிய சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார். அவரது வருகையால் இந்திய டெஸ்ட் அணி வலிமையாக இருக்கிறது. எல்லா விதமான ஆடுகளங்களிலும் அவரது பங்களிப்பு இருக்கும். 6-வது வரிசையில் வந்து சிறப்பாக ஆடுகிறார். அதோடு 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசுகிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்த்திக் பாண்டியா ஆதிக்கம் செலுத்தினார். அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தார். தனது அதிரடியை தொடர்ந்து நிலை நிறுத்தினால் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருப்பார்.