செய்திகள்

சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில் சத்தீஸ்கர் முதல்-மந்திரியின் மகன் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக ராமன் சிங் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பனாமாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்று வெளிநாடு வங்கிகளில் போலி பெயரில் கணக்கு வைத்திருக்கும் மற்றும் ரகசியமாக தொழில் தொடங்கி இருக்கும் வெளிநாட்டு தலைவர்கள் பற்றிய தகவல்களை ஏற்கனவே பனாமா பேப்பர் என்ற பெயரில் வெளியிட்டது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது சம்மந்தமாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டு அவரது பதவியை பறித்து உத்தரவிட்டது.

இதேபோல பனாமா பேப்பரில் சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன்சிங்கின் மகன் அபிஷேக்சிங் பெயரும் இருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது. பிரபல வக்கீல் பிரசாந்த்பூ‌ஷண் தொடங்கி இருக்கும் சுவராஜ் அபியான் அமைப்பு இந்த குற்றச்சாட்டை கூறியது.

பிரசாந்த்பூ‌ஷண் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகி யோகேந்திர யாதவ் ஆகியோர் இதுபற்றி கூறும்போது, இங்கிலாந்துக்கு சொந்தமான விர்ஜின் தீவில் ராமன்சிங்கின் மகன் 2 நிறுவனங்களை பதிவு செய்துள்ளார். அதில் ரூ.11 கோடி அளவிற்கு ரகசியமாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் பனாமா பேப்பரில் வெளிவந்துள்ளது என்று கூறினார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பாஸ்டர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது இந்த விவகாரத்தை பற்றி பேசினார். அவர் கூறியதாவது:-

பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில் நவாஸ்செரிப் பெயர் இருந்ததால் அவர் இப்போது பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சத்தீஸ்கர் முதல்-மந்திரியின் மகன் அபிஷேக்சிங்கின் பெயரும் அதில் இடம் பெற்றிருக்கிறது.

இதற்கு முதல்-மந்திரி ராமன்சிங் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் இதில் என்ன நடவடிக்கை எடுத்தார். உண்மையிலேயே ஊழலுக்கு எதிராக இருந்தால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.