செய்திகள்

'பத்மாவத்' பட இயக்குனர் மீதான வழக்கு தள்ளுபடி: ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

‘பத்மாவத்’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி இயக்குகர் பன்சாலி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதாக ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். #Padmaavat

ஜோத்பூர்:

நடிகை தீபிகா படுகோனே நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ‘பத்மாவத்’ படத்துக்கு ராஜபுத்ர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பன்சாலிமீது ராஜஸ்தான் மாநிலம் நாகாவூர் மாவட்டம் திட்வானா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை எதிர்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் பன்சாலி சார்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி சந்தீப் மேத்தா படத்தை பார்த்து உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார். இதையடுத்து நீதிபதிக்காக ஜோத்பூர் திரையரங்கில் நேற்று முன்தினம் விசே‌ஷ காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

படத்தை பார்த்த பின்பு நேற்று நீதிபதி கோர்ட்டுக்கு வந்து மனு மீதான விசாரணை நடத்தினார். அப்போது ‘பத்மாவத்’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி பன்சாலி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில், “ராணி பத்மாவதி கதை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டது. மேலும் மத அடிப்படையிலான கதாபாத்திரம். அவரது உயிர்த்தியாகம் படத்தில் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனைக்கு எதுவும் இல்லை. இந்த படம் திரையிடப்பட்டால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் கடமை” என்று உத்தரவிட்டுள்ளார். #Padmaavat #Padmavati #RajasthanHighCourt #SanjayLeelaBhansali #DeepikaPadukone

SCROLL FOR NEXT