மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் காட்சி. 
செய்திகள்

பல்லடம் அருகே மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பயணிகள் படுகாயம்

பல்லடம் அருகே இன்று காலை மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வலைய பாளையத்தில் இருந்து பல்லடத்திற்கு இன்று காலை 8 மணிக்கு மினி பஸ் புறப்பட்டு வந்தது. இதனை வலைய பாளையத்தை சேர்ந்த டிரைவர் அருண் (28) என்பவர் ஓட்டி வந்தார்.

இதில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் நல்லா கவுண்டம்பாளையம் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே மற்றொரு மினி பஸ் வந்தது.

அதற்கு வழி விடுவதற்காக மினி பஸ் டிரைவர் அருண் பஸ்சை இடது பக்கம் திருப்பினார். அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் சுமார் 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலறினார்கள். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு நல்லூர் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (50), சுமதி (27), முத்துலட்சுமி (25), அருக்காணி (35), சரஸ்வதி (34) ஆகிய 5 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்லடம் பகுதியில் மழை பெய்து இருந்தது. இதனால் மண் ஈரமாக இருந்தது. இதன் காரணமாகதான் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.