செய்திகள்

பல்லடம் அருகே அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது

பல்லடம் அருகே மின்வாரிய தொழிலாளரை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்பியன் கோவில் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவரது தம்பி கஜேந்திரன் (29). இவர்கள் இருவரும் பெருந்தொழுவு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்கள்.

பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கு வந்த பின்னரும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அவர்களது தந்தை சுப்பிரமணி கண்டித்தார். ஏன் இருவரும் சண்டை போட்டு கொள்கிறீர்கள் என சத்தம் போட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது தந்தையை அடிக்க பாய்ந்தார். இதனை ரமேஷ் தடுத்தார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து தனது அண்ணன் ரமேஷ் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரமேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு பூங்கொடி என்ற மனைவியும், சுதாகர் (12) என்ற மகனும் உள்ளனர்.

SCROLL FOR NEXT