ஜெருசலேம்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்தது. ஜெருசலேம் நகரில் உள்ள மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை இஸ்ரேலிய போலீசார் சுட்டுக்கொல்வதும் தொடர்கதையானது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மேற்கு கரை பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரரான அடீல் கோல்மன் (வயது 40) என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரஹ்மான் பானி படெல் (28) என்ற பாலஸ்தீன வாலிபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, அங்கு வந்த இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரை சுட்டுக்கொன்றனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அடீல் கோல்மனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.