செய்திகள்

பழனி கோவில் சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.யிடம் ஒப்படைக்க கோரி பெண் தர்ணா

பழனி மூலவர் சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்க வேலிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பழனி:

பழனி மலைக்கோவிலில் மூலவர் சிலைக்கு முன்பாக புதிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை செய்யப்பட்டதில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்தபதி முத்தையா, கோவில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த சிலை மோசடியில் பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டது. இதற்காக சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பழனிக்கு நேரடியாக வந்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இது பழனி முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பக்தர் பேரவையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவாக கூறி கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் கையில் பதாகையுடன் வந்து அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

அதில் பழனி கோவில் சிலை மோசடி வழக்கை சி.பி.ஐ.டி.க்கு மாற்ற கூடாது. ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் விசாரிக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தர்ணாவில் ஈடுபட்ட அவரை போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நர்மதா கூறுகையில், வழக்கை இருட்டடிப்பு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் சிக்கி உள்ளனர். எனவே இந்த வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரக்கூடும் என்பது பக்தர்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

SCROLL FOR NEXT