ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நசீம் ஷா 
செய்திகள்

நசீம் ஷா ஐந்து விக்கெட்: 263 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

கராச்சியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் நசீம் ஷா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி இலங்கையை 263 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க வீரர்களான ஷான் மசூத் - அபித் அலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

475 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

தொடக்க வீரர் ஒஷாடா பெர்னாண்டோ மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். ஒரு கட்டத்தில் இலங்கை 97 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. பெர்னாண்டோ சதமும், டிக்வெல்லா அரைசதமும் அடித்தனர்.

இதனால் நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தனர். இந்நிலையில்தான் டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி104 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த தில்ருவான் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழக்க நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்துள்ளது. ஒஷாடா பெர்னாண்டோ 102 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ நேற்று எடுத்திருந்த 102 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் ரன்ஏதும் எடுக்க முடியாமல் விழ இலங்கை 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தான் 263 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

முதல் போட்டி மழையினால் டிரா ஆனதால் பாகிஸ்தான் தொடரை 1-0 எனக்கைப்பற்றியது. 10 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.