செய்திகள்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீனை நீட்டிக்க கோரி நவாஸ் ஷெரீப் மனு

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஜாமீன் காலம் முடிவடையும் நிலையில் தனது ஜாமீனை நீட்டிக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். #Pakistan #NawazSharif

    இஸ்லாமாபாத்:

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை பறிகொடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, அல்-ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.

அதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்காக 6 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதே சமயம் இந்த ஜாமீன் காலத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த ஜாமீன் காலம் வருகிற 7-ந் தேதி நிறைவடைகிறது. எனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெறும் வகையில் அவரது ஜாமீனை நீட்டிக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தனது ஜாமீனை நீட்டிக்காவிட்டால் மன்னிக்க முடியாத பேரழிவை சந்திக்க நேரிடும் என நவாஸ் ஷெரீப் மிரட்டல் தொனியில் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   #Pakistan #NawazSharif   

SCROLL FOR NEXT