ஜலந்தர்:
பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் அத்துமீறி நடந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பரோபால் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு சுட்டுக்கொன்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பரோபால் எல்லைப்பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் வந்தார். சந்தேகத்திற்கு இடமான அந்த நபரை ‘உள்ளே வர வேண்டாம், திரும்பி செல்லுங்கள்’ என பாதுகாப்புப் படையினர் எச்சரித்தனர்.
ஆனால் அந்த நபர் பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையயும் மீறி சந்தேகிக்கும் வகையில், பாதுகாப்பு வேலி அருகே வந்துள்ளார். ஆபத்தை உணர்ந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டு கொன்றனர். விசாரணையில் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.