ஜெய்சால்மர்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களைத் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த மசோதாவுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சார்பில், சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகள், இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நேற்று பேரணி நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்த பேரணி நடைபெற்றது.
இப்பேரணி குறித்து அகதி ஒருவர் கூறும்போது, ‘கடந்த 57 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இதுவரை நாங்கள் குடியுரிமை பெறவில்லை. போதிய வசதிகளும் கிடைக்கவில்லை. இனி நாங்கள் சிறப்பாக வாழ இந்த சட்டம் உதவியாக இருக்கும்’ என்றார்.