செய்திகள்

இந்திய தொலைக்காட்சி தொடர்கள் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான் கோர்ட்

இந்திய தொலைக்காட்சி தொடர்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி:

உரி ராணுவ முகாம் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடையை விதித்தது.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய திரைப்படங்களை திரையிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தொலைக்காட்சி தொடர்கள் மீதான தடை நீடித்தது.

இதனை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்திய தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று உத்தரவிட்டது.

‘உலகம் இப்போது உலகளாவிய கிராமமாக மாறிவிட்டது. எவ்வளவு காலம்தான் இதுபோன்ற காரணமற்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்? இந்திய தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்புவதற்கு மத்திய அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதபோது, தடை விதிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை’ என தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT