செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மாலை மலர்


ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் தொடர்ந்து இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. 

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று இந்திய படையின் தயார்நிலை மற்றும் மாநிலத்தில் பாதுகாப்பு நிலை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், நேற்றிரவு 1 மணியளவில் பாகிஸ்தான் படையினர் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

ரஜோரியின் நவ்ஷேரா செக்டாரில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் பலியானார்.  இதேபோன்று பூஞ்சின் திக்வார் செக்டாரிலும் இடைவிடாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.  இந்த தாக்குதல் அதிகாலை 5.30 மணிவரை தொடர்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் 23-ம் தேதி பாகிஸ்தான் படையினரின் தாக்குதலால் ராணுவ உயரதிகாரி ஒருவர் மற்றும் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வருடத்தில் 881 முறை அத்துமீறிய தாக்குதல் நடந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகம் ஆகும். எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில் நடந்த இந்த தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர்.