பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த மாதம் 25-ம் தேதி சுமார் 25,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிவந்த டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் லாரியின் டேங்கர் உடைந்து சாலையில் ஓடிய பெட்ரோலை பிடிக்க சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் சூழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில், பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 100 க்கும் அதிகமானோர் விபத்து நடைபெற்ற இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
லாகூர், முல்தான் மற்றும் பைசாலாபாத் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த கோர சம்பவம் தொடர்பாக விசாரித்துவந்த பாகிஸ்தான் எண்ணெய் மற்றும் எரிவாய்த்துறை ஒழுங்குமுறை ஆணையம், இந்த விபத்துக்கு காரணமான பெட்ரோலிய நிறுவனமான ‘ராயல் ஷெல் டட்ச்’ நிறுவனத்துக்கு 19.9 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.