துபாயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 262 ரன்னில் சுருண்டது.
220 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 26 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டும், ஹாரிஸ் சோஹைல் 3 விக்கெட்டும், யாசீர் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஷான் மசூத், சமி அஸ்லாம் களம் இறங்கினார்கள். ஆனால் இலங்கை அணியினரின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 52 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் ஆசாத் சபிக் 81 ரன்களும், சர்ப்ராஸ் அகமது 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணி சார்பில் தில்ரூவான் பெராரா 3 விக்கெட் கைப்பற்றினார்.