செய்திகள்

பாலகோட் தாக்குதலுக்குப்பின் காஷ்மீர் எல்லையில் 513 முறை அத்துமீறி தாக்கிய பாகிஸ்தான்

பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து கடந்த 1½ மாதங்களில் மட்டும் 513 முறை பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி கூறினார். #BalakotStrike #India #Pakistan

ஜம்மு:

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலமாக அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் புலவாமாவில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி 26-ந் தேதி குண்டுவீசி தாக்குதலை தொடுத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஒயிட் நைட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் நேற்று ரஜோரி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாலகோட் தாக்குதலுக்கு பிறகான கடந்த 1½ மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றி இருக்கிறது. இதில் பீரங்கி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை 100 முறைக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கிறது. இதைப்போல கிராமப்பகுதிகளையும் தங்கள் இலக்குகளாக்கி இருந்தனர்.

இந்த தாக்குதல்களில் நமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சுமார் 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

இந்த தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து சரியான பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சரியான விவரங்கள் இல்லை. ஏனெனில் இந்திய ராணுவத்தை போல பாகிஸ்தான் தனது சேத விவரங்களை வெளியில் சொல்லாது.

எனினும் நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில், நமது பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை விட 5 முதல் 6 மடங்கு அதிக சேதம் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் தரப்பில் இருந்து குறிபார்த்து சுடும் சம்பவங்கள் கடந்த பிப்ரவரி 27-ந் தேதிக்கு பிறகு நடைபெறவில்லை. இதற்கு நாம் மேற்கொண்ட வெற்றிகரமான பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம் ஆகும்.

இவ்வாறு பரம்ஜித் சிங் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்களின் செயல்பாட்டை வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பரம்ஜித் சிங், இந்த விவாதத்தில் தலையிட ராணுவம் விரும்பவில்லை எனக்கூறினார். இதைப்போல ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் பரம்ஜித் சிங் உறுதிபட தெரிவித்தார்.

SCROLL FOR NEXT