லே:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தை ஐ.நா வரை கொண்டு சென்றது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற முக்கிய நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில் லடாக் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று லடாக் வந்தார். பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-
பாகிஸ்தான் நாடு, பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கும் போது இந்தியா எவ்வாறு பாகிஸ்தானுடன் பேச முடியும்? பாகிஸ்தானுடன் நட்புறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால் அது முதலில் இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தை கொண்டு வர முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும்.
காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லை. நான் பாகிஸ்தானைக் கேட்க விரும்புகிறேன், காஷ்மீர் எப்போது பாகிஸ்தானுக்கு சொந்தமானது? காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை நிறுத்துவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.