கராச்சி:
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜக்கப்பாத் மாவட்ட்டத்தை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது 15 வயது நிரம்பிய மிஹக் குமாரி என்ற மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியில் வசித்துவரும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த அலி ரசா சோலாங்கி என்ற நபர் சிறுமி குமாரியை கடந்த 15-ம் தேதி கடத்திச்சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமியை முஸ்லிம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சிறுமி குமாரியின் தந்தை விஜய் குமார் தனது 15 வயது மகளை கடத்திச்சென்று மதமாற்றம் செய்து அலி ரசா வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டாதாகவும், தனது மகளை மீட்டுத்தரும்படியும் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அலி ரசாவிடமிருந்து குமாரியை போலீசார் மீட்டனர். இதைதொடர்ந்து, இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, சிறுமி மிஹக் குமாரியை பெண்கள் போலீஸ் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிகைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறுமியின் உண்மையான வயது என்ன? என்பதை கண்டறிந்து வரும் 3-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பாகிஸ்தானில் இந்து பெண்கள் கடத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.