பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ஒன்றிணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றார்.
இன்று பிரிக்ஸ் மாநாடு துவங்கியதும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி வருவது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் ஆபத்து தொடர்பாக பிரிக்ஸ் தலைவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.
அவரது கருத்தை சீன பிரதமர் க்சி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் டெமெர், தெற்காப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பலமாக ஆதரித்தனர்.
இதையடுத்து, தீவிரவாதத்தை எதிர்த்து தீர்க்கமாக போராடுவது என பிரிக்ஸ் தலைவர்கள் உறுதி ஏற்றனர். இதுதொடர்பாக, இன்று கண்டன அறிக்கை ஒன்றையும் பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்டது.
43 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், தெற்காசிய பிராந்தியத்தில் தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா, கிழக்கு துருக்மேனிஸ்தான் இஸ்லாமிய அமைப்பினர், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய அமைப்பினர், பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாதக் குழுக்கள் லஷ்கர் இ தொய்பா, ஜைஷ் இ முஹம்மது, தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் மற்றும் ஹிஸ்ப் உத் தஹ்ரிர் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் தொடர்பாகவும், இதனால் பிரிக்ஸ் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது பற்றியும் பிரிக்ஸ் அமைப்பு கவலை கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வித தீவிரவாதத்தையும் நியாப்படுத்த முடியாது. இத்தகையை தாக்குதலை நடத்துபவர்கள், திட்டம் தீட்டி தருபவர்கள், இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், மற்ற நாடுகளின் இறையாண்மையிலும், உள்ளாட்சி முறையில் தலையிடாமலும், தீவிரவாதத்தை தடுக்கவும், எதிர்த்து போராடவும் சர்வதேச சமுதாயத்தின் ஒருங்கிணந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக உள்ளது எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது பாகிஸ்தானை தீவிரவாத நாடாக பிரகணடப்படுத்த இந்தியா எடுத்த முயற்சியை பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தடுத்து விட்டது. இதையடுத்து, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முதன்முதலாக தற்போது தான் தீவிரவாதத்துக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.