குல்பூஷண் ஜாதவ் 
செய்திகள்

குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் தனது பொறுப்புகளை மீறியுள்ளது - சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் தனது பொறுப்புகளை மீறியுள்ளது என சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்காவி யூசுப் தெரிவித்து உள்ளார்.

மாலை மலர்

ஐக்கிய நாடுகள்:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து, குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017, ஏப்ரல் மாதம் மரண தண்டனை அளிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதித்தது.

இந்நிலையில்,  குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வியன்னா உடன்படிக்கையின் படி, பாகிஸ்தான் தனது பொறுப்புகளை மீறியுள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி அப்துல்காவி யூசுப் ஐ.நா பொதுச்சபையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் அறிக்கையை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச்சபையில் தலைமை நீதிபதி அப்துல்காவி யூசுப் சமர்ப்பித்தார்

அதில், ஜாதவ் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பல அம்சங்களை விரிவாக விவரித்தார். ஜூலை 17 ம் தேதி தனது தீர்ப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நீதித்துறை அமைப்பு, பாகிஸ்தான் தனது கடமைகளை 36-வது பிரிவின் கீழ் மீறியுள்ளதாகக் கண்டறிந்ததை குறிப்பிட்டுள்ளது.