பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளது. அதன் தூதரக அதிகாரியாக டேவிட் காலே பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர் காரில் பயணம் செய்தார். காரை டிரைவர் ஜோசப் இமானுவேல் ஓட்டினார்.
வழியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மீது தூதரக கார் பயங்கரமாக மோதியது, அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அதீப் பெய்க் என்ற வாலிபர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னால் அமர்ந்து இருந்தவர் காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் மோதிய கார் நிற்காமல் வேகமாக சென்றது.
அதை போலீசார் சோதனை சாவடியில் விரட்டிச் சென்று பிடித்தனர். கைது நடவடிக்கையில் இருந்து விதிவிலக்கு என்பதால் அமெரிக்க தூதரும், கார் டிரைவரும் கைது செய்யப்படவில்லை. கார் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தூதர் டேவிட் காலே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் தென்மினா ஒஞ்சுயா சம்மன் அனுப்பினார். இதை தொடர்ந்து நேரில் ஆஜரான அமெரிக்கதூதரிடம் விபத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.