இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு கோர்ட்டான தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.
இரண்டு நிறுவனங்களில் நவாஸ் ஷெரீப் முதலீடு செய்த வழக்கு குறித்தான விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவருக்கு ஜாமீனில் வரக்கூடிய வகையிலான பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஜாமினில் வரக்கூடிய வாரண்ட் என்பதால் நவாஸ் ஷெரீப் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.