செய்திகள்

சென்னையில் ‘பத்மாவத்’ படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு

வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு இருப்பதால், சென்னையில் இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘பத்மாவத்’.

குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தீவைப்பு, தியேட்டர்கள் சூறை, வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால் தென்மாநிலங்களில் இந்த படத்துக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை, தமிழ்நாட்டில் ‘பத்மாவத்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த படம் மொத்தம் 145 தியேட்டர்களில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் தற்போது 24 தியேட்டர்களில் ‘பத்மாவத்’ படம் திரையிடப்படுகிறது. வட மாநிலங்களில் எதிர்ப்பு இருப்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்த படத்தை திரையிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு இல்லாததால், சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இந்த படம் திரையிடப்படுகிறது.

வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு இருப்பதால், சென்னையில் இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று சில தியேட்டர்களில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த சிறப்பு காட்சிகள் மூலம் ரூ.24 லட்சம் வசூல் ஆகி இருக்கிறது. ‘பத்மாவத்’ படத்துக்கு வரவேற்பு இருப்பதால் தமிழ்நாட்டில் இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பட வினியோகஸ்தர் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ‘பத்மாவத்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இது 3டி, 2டி, ஐனாக்ஸ் 3டி என்ற மூன்று தொழில் நுட்பத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தை 3டி, ஐநாக்ஸ் 3டி தொழில் நுட்பத் தில் பார்க்கும்போது பிரமிக்கும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு வெளியாகி இருக்கும் ‘பத்மாவத்’ படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  #tamilnews