திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பழமையும், பிரசித்தியும் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கோவில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் 6 ரகசிய நிலவறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொண்ட பொக்கிஷம் இருப்பதும் தெரியவந்தது இதனை மன்னர் குடும்பத்தினர் திருடுவதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி கோர்ட்டிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த ரகசிய நிலவறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள தங்க, வைர நகைகளை கணக்கு எடுக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை கண்காணிக்க மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியத்தை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அவரும் இந்த பணிகள் தொடர்பான அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறார்.
ஆனால் இங்குள்ள ‘பி’ ரகசிய நிலவறை மட்டும் இதுவரை திறக்கப்பட வில்லை. இந்த நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து என்று பீதி கிளப்பப்பட்டதால் அந்த நிலவறையை திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை. இதற்கிடையில் பத்மநாப சுவாமியின் நெற்றி திலகத்தில் இருந்த 8 வைரங்கள் மாயமானதாக புகார் எழுந்தது.
இதுபற்றி வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ரகசிய ‘பி’ நிலவறையை உடனே திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிட வேண்டும். இதை திறப்பதில் ஏற்படும் தாமதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும். இந்த நிலவறையை திறந்தால் ஆபத்து என்று தேவையற்ற வதந்தி கிளப்பப்படுகிறது. ஏற்கனவே பலமுறை மன்னர் குடும்பத்தினர் இந்த நிலவறையை திறந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரித்த நீதிபதிகள் ரகசிய ‘பி’ நிலவறையை திறப்பது பற்றி விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பத்மநாபசுவாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாத ‘பி’ ரகசிய நிலவறையை திறப்பதற்கு முன்பு திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தின் அனுமதியை பெறுவது அவசியம். மேலும் இந்த கோவிலில் ஏராளமான ஐதீகங்கள் இருப்பதால் பத்மநாபசுவாமி கோவிலின் தந்திரி மூலம் ரகசிய நிலவறையை திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்க வேண்டும். அதன்பிறகே ரகசிய அறையை திறப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.