ப. சிதம்பரம் 
செய்திகள்

ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் அவதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் இருப்பதால் வெளியே வர முடியாத நிலையில் உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு 4-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

ப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறை உணவு ஒத்துக்கொள்ளாததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 4 முறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ப.சிதம்பரம் வயிற்று வலி காரணமாக ஆர்.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

இதற்கிடையே ப.சிதம்பரம் குரோன் எனப்படும் ‘குடல் அழற்சி’ நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான சிலர் கூறும் போது, “ப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் வாய் முதல் வயிற்றில் குடல் பகுதிவரை புண்கள் ஏற்பட்டு பெரும் எரிச்சல் ஏற்படும். எனவே அவருக்கு உடனடியாக உரிய சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

சிறையில் உள்ள சுமார் 1½ மாதத்தில் ப.சிதம்பரத்தின் உடல் எடை 5 கிலோவரை குறைந்து விட்டது. இதுவும் குடல் அழற்சி நோயின் வெளிப்பாடுதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.