செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- கார்த்தியை தொடர்ந்து ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram