வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் செனட்டர் ஜெகன்செப் ஜமால்தினி கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு உள்துறை அமைச்சகம் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் கடந்த 2012 ஜனவரி முதல் 2017 ஜூன் வரை அதாவது 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 105 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் 134 நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியா, லாவோஸ், தோசோ, போர்ட்லூயில், லைபீரியா, கினியா, புருண்டி,மடகாஸ்கர், மலாவி, காங்கோ, டொமினிக் குடியரசு, மொசாம்பிக், அங்கோலா மற்றும் எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் போன்றவை அதில் அடங்கும்.
அதிக பாகிஸ்தானியர்கள் வெளியேற்றிய நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், மலேசியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இருந்து அதிகம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.