அபுஜா:
போகோஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நைஜீரியாவில் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
இதனால் அங்கு வாழும் மக்களில் சிலர் குழுக்களாக இணைந்து பொருளாதார தேவைகளுக்காக உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வருகின்றனர்.
ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டும் இத்தகைய குழுவினர் கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு வாழும் மக்களை கொன்றும் வீடுகளை எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு செயல்படும் குழுக்களில் பன்டீட்ஸ் என்ற கொள்ளை கும்பல் முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கட்சினா மாகாணம் டன்முசா, டஸ்சின்மா மற்றும் சஃபானா ஆகிய கிராமங்களுக்குள் பன்டீட்ஸ் கொள்ளை கும்பல் நேற்று பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
மேலும், அந்த கிராமங்களில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு வீடுகளில் இருந்த உணவு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
பன்டீட்ஸ் கொள்ளை கும்பல் நடத்திய இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.