ஒட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன். இவரது மனைவி உத்திரகனி (வயது47). இவர்களது மகன் ஜெயராமன் (24). பட்டதாரி. உத்திரகனி புதியம்புத்தூர் பஞ்சாயத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் புதியம் புத்தூர் பஞ்சாயத்து பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதாகவும், அதற்கு பஞ்சாயத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அங்கு எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவரான அ.ம.மு.க. நகர செயலாளர் பெஸ்கி ராஜா (43) என்பவர் வாட்ஸ்- அப்பில் தகவல் பரப்பியுள்ளார்.
இதனை கவனித்த உத்திர கனியின் மகன் ஜெயராமன் பெஸ்கி ராஜா வெளியிட்ட பதிவை கண்டித்து அவருக்கு எதிரான கருத்தை வாட்ஸ் -அப்பில் பதிவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பெஸ்கி ராஜா, தனது கடையில் பணி புரியும் ரகுபதி (27) என்பவருடன் சென்று ஜெயராமனை தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெயராமனின் தலையில் தாக்கினர். மேலும் தடுக்க வந்த ஜெயராமனின் தாய் உத்திர கனியையும் கம்பியால் தாக்கினர். இதில் காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதியம் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பெஸ்கி ராஜா, ரகுபதி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் பட்டதாரி வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.