செய்திகள்

பட்டாசு மீதான சரக்கு-சேவை வரியை உயர்த்த வேண்டாம்: மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடக்கூடாது. இதனால் பட்டாசு மீதான சரக்கு-சேவை வரியை உயர்த்த வேண்டாம் என்று மத்திய அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிலேயே பட்டாசு அதிகமாக தயாரிக்கப்படுவது சிவகாசியில்தான் என்ற தனிப்பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. விஞ்ஞானம் பல வகைகளில் முன்னேறிவிட்ட நிலையிலும்கூட, இன்று வரை சிவகாசியில் கைகளால்தான் பட்டாசு தயார் செய்யப்படுகிறது.

இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. அந்தக் குடும்பங்கள் நம்பி இருப்பது பட்டாசு தொழிலை மட்டும்தான். இதுவரை பட்டாசுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவீத வரி, 1-7-2017 முதல் மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, சீன பட்டாசுகளின் வருகையால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிவகாசி பட்டாசுகளின் அளவு குறைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில், மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை உயர்த்தி இருப்பது, அவர்களுக்கு மேலும் வேதனையை உண்டாக்கி இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி உயர்வால், பட்டாசு தொழிலே அழிந்துவிடும் என்ற பயம் தொழிலாளர்களுக்கு உருவாகி இருக்கிறது.

இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் காலவரையற்ற தொழில் நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். அந்த போராட்டம் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துவிடக்கூடாது.

எனவே, மத்திய அரசு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை, முன்பு இருந்தது போலவே 12 சதவீதமாக குறைத்து, பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிலையான நிம்மதியை தரவேண்டும்.

பட்டாசு என்றாலே சிவகாசிதான் என்று இந்தியாவிற்கு கிடைத்த உலகப்புகழ், குறிப்பாக தமிழ்நாட்டுக்கு கிடைத்த புகழ், சிதைந்து போய்விடாமல் காப்பாற்றித்தர வேண்டும் என்று மத்திய அரசை வேண்டிக்கொள்கிறேன்.