சென்னை:
அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், மே தின பொதுக்கூட்டம் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தை 27 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை நமக்கு தான் உண்டு. அந்த பெருமையை பெற்றுத்தந்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் நம்முடைய இயக்கம் ஜெயலலிதாவின் மக்களாட்சி தத்துவத்தின்படி, வழிக்காட்டுதலின் படி நடக்கிறது.
ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்று நாம் நினைத்தோம். ஆனால் அப்படி சென்றுவிட்டது. அந்த குடும்பத்தின் கையில் இருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தர்மயுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நம்முடைய வேட்பாளர் மதுசூதனனுக்கு மக்கள் முழு ஆதரவை தந்தனர். அதில் மிரண்டுபோய் டி.டி.வி.தினகரன் அணியினர் ரூ.4 ஆயிரமும், தி.மு.க.வினர் ரூ.2 ஆயிரமும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டார்கள். தேர்தலையும் நிறுத்திவிட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் எப்போது நடந்தாலும் எங்களுடைய வேட்பாளர் மதுசூதனன் தான். கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மக்களாட்சி தத்துவப்படி இந்த தர்மயுத்தத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஜெயலலிதா சாவில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அ.தி.மு.க.வினர் ஒரு குடும்பத்தினரின் வாசலில்போய் நிற்கக்கூடிய நிலை ஏற்படக்கூடாது என்பது தான் எங்கள் தர்மயுத்தத்தின் பிரதான நோக்கம்.
மக்களின் எண்ணத்தின்படி டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைத்ததாக கூறினார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெயரை நீக்காமல், கூடுதலாக எடப்பாடி பழனிசாமி பெயரை மட்டும் சேர்க்கிறார்கள். இவர்களை எப்படி நம்புவது?
ஜெயலலிதா இருக்கும்போது யார் குடும்பத்தின் கீழ் கட்சி சென்றுவிடக்கூடாது என்று நினைத்தாரோ, அந்த குடும்பத்தின் கையில் கட்சி தற்போது இருக்கிறது. ஜெயலலிதா விருப்பப்படி ஆயிரம் ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்றால், அந்த குடும்பத்திடம் இருந்து விடுபட வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
கூட்டத்தில் மதுசூதனன் பேசுகையில், “தொண்டர்களை நம்பி அன்றைக்கு ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறார். சசிகலா குடும்பத்தின் கையில் சிக்கி கட்சி சின்னாபின்னமாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பி.எஸ். கட்சியை வழி நடத்தி கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் எப்போது தேர்தல் நடத்தினாலும் நான் வெற்றிபெறுவது உறுதி. தொண்டர்களை நம்பி தர்ம யுத்தத்தை தொடங்கி இருக்கும் ஓ.பி.எஸ். நிச்சயம் வெற்றி பெறுவார்” என்று பேசினார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்திற்கும், மதுசூதனனுக்கும் கட்சி தொண்டர்கள் வீரவாள் பரிசளித்தார்கள். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கா.சங்கரதாஸ் வரவேற்றார். வடசென்னை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, கே.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.எஸ்.ஜனார்த்தனம், ஏ.கணேசன், எம்.கண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.