செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு பக்கபலமாக, பாதுகாப்பாக இருப்போம்: ஓ.பன்னீர்செல்வம்

சிறுபான்மை மக்களுக்கு பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் நாங்கள் இருப்போம் என ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மாலை மலர்

அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) கட்சி சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செம்மலை, கே.பாண்டியராஜன், நத்தம் விசுவநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், த.மா.கா. மாநில துணை தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் மற்றும் வாலாஜாபாத் ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சார்பில் வடசென்னை பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

உண்மை, நேர்மை, பொறுமை, கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என ஜெயலலிதா நமக்கு கற்றுக் கொடுத்தார். நமது இலக்கு எதுவாக இருந்தாலும் நமது பயணம் தர்ம பாதையில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தமிழகத்தில் சிலர் பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர்.

ஆனால் நாம் அன்பு, பாசம், நேர்மை, நியாயம், தர்மத்தின் வழியில் நடக்கிறோம். அதனால் லட்சோப லட்சம் விசுவாசிகளும், தொண்டர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள். அதனால் தமிழக மக்கள் அனைவரும் நம் பின்னால் இருக்கிறார்கள். விசுவாசம் மிக்க தொண்டர்களின் பலத்தால் விரைவில் தமிழகத்தை மீட்டு எடுப்போம்.

ஜெயலலிதா ஹஜ் பயணிகளுக்கு ஏராளமான நிதியுதவி வழங்கினார். நோன்பு கஞ்சிக்காக 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசியை வழங்கினார். இந்த திட்டம் இஸ்லாமிய நாடுகளில் கூட நடைமுறை படுத்தப்பட வில்லை. எனவே இஸ்லாமிய நாடுகளும் ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டின.

இஸ்லாமிய மக்களிடம் ஜெயலலிதா காட்டிய அக்கறை, இஸ்லாமிய மக்களிடம் ஜெயலலிதா காட்டிய அன்பை போல சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் என்றும் பக்க பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அன்று இருந்த அ.தி.மு.க. சரியான முடிவை எடுத்தது. ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக தேர்ந்து எடுத்தது. அவரது ஆட்சி இன்று தொடருமானால் தமிழகத்தை யாரும் குறை சொல்ல முடியாது. இதற்கு எல்லாம் காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும்.

காமராஜர், அண்ணா, ஜெயலலிதா இவர்களின் செயல்பாடு இஸ்லாம் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது. அதே வகையில் இந்த மேடையில் இருக்கும் தலைவர்களின்(அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி) பணி இஸ்லாம் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர்ந்து மக்களுக்கு நல்லாட்சி நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.