செய்திகள்

ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதால் தினகரன் வெளியேற்றப்பட்டார்: ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதால் தினகரன் வெளியேற்றப்பட்டார் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மாலை மலர்

ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார்கள். எம்.ஜி.ஆர். வள்ளல் குணம் படைத்தவர். அவர் வழியில் வந்த ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினார்.

அம்மா ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சியை கொடுக்க முடியாது. அம்மா அறிவித்த திட்டம் போல் வேறு யாரும் தர முடியாது. அதனால் தான் தமிழக மக்கள் அவரிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்தார்கள்.

எதை செய்தாலும் குறை சொல்ல கூடியவர்கள் அம்மா வழி அரசை குறை சொல்லி வருகிறார்கள். அம்மா வழியில் பயணம் செய்யும் இந்த ஆட்சி அம்மா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

சிலர் சரித்திரத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். இதற்கு சில துரோகிகள் நடவடிக்கை தலையாட்டி கொண்டிருக்கிறது. தொண்டர்கள் துணையோடு துரோகிகள் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவோம்.

அ.தி.மு.க. வின் வரலாறு என்ன? தொண்டர்கள் செய்த தியாகம் என்ன? எத்தனை தொண்டர்கள் உயிரை மாய்த்து உள்ளனர் என டி.டி.வி. தினகரனுக்கு தெரியாது. அவர் என்னை அம்மாவிடம் அறிமுகப்படுத்தியதாக சொல்லி வருகிறார்.

அவர் பெரியகுளம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வரும் முன்பே பெரிய குளம் வார்டு பிரதிநிதியாக இருந்தேன். பின்னர் வார்டு செயலாளர், நகர செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தேன்.

1996-ல் அம்மாவின் ஆசியோடு நகர் மன்ற தலைவரானேன். பின்னர் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானேன். அம்மாவுக்கு சோதனை வந்த போது முதல்-அமைச்சர் பதவி தந்தார். டி.டி.வி. தினகரனை வீட்டுக்குள் வரக்கூடாது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபட கூடாது என அம்மா விரட்டினார்.

சோதனை முடிந்து அம்மா மீண்டும் முதல்-அமைச்சரானார். அப்போது அக்குடும்பத்தை சேர்ந்த 16 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நீக்கினார்.


எனக்கு எதிராக சதி செய்ததால் தான் நீக்குவதாக அம்மா அறிவித்து இருந்தார். 3 மாதம் கழித்து தற்போது சிறையில் இருப்பவர் மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவரை மட்டும் நம்பி ஏற்றுக் கொண்டார்.

மற்றவர்களை நீக்கியது நீக்கியதுதான் என கூறி விட்டார். இதில் இருந்து யார் துரோகம் செய்தது என்பது தெரிய வரும். டி.டி.வி. தினகரன் சதி திட்டம் தீட்டியதால் அம்மாவால் விரட்டியடிக்கப்பட்டார்.

இது தெரியாமல் என்னை திரும்ப, திரும்ப பேச வைக்கிறார். எம்.ஜி.ஆர். தனது குடும்பத்தை கட்சிக்குள் கொண்டு வரவில்லை. அம்மாவும் எந்த ஒரு குடும்பத்தையும் கட்சிக்குள் கொண்டு வரவில்லை.

இந்த இயக்கம் லட்சோப லட்சம் தொண்டர்கள் கொண்ட இயக்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தி வருகிறோம். இங்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என பாருங்கள். டி.டி.வி. தினகரன் என்ன பேசுவது என தெரியாமல் பேசுகிறார். இவரே பொது செயலாளர், முதல்-அமைச்சர் என அறிவித்து செயல்படுகிறார்.

அவர் 4 மாதத்திற்கு முன்பே தேவையானவர்களை நியமித்து திட்டமிட்டு ஜெயித்து விட்டார். ஒரு முறை அசந்து விட்டோம். இனி மேல் அசர மாட்டோம். வேறு எந்த தொகுதியிலும் இது போல் தவறு நடக்க விடமாட்டோம்.

நாங்கள் சுய நலத்துடன் செயல்படுவதாக கூறுகிறார். அப்படி செயல்பட்டால் இவ்வளவு கூட்டம் வருமா?