செய்திகள்

பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடு இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

பிரதமர் மோடிக்கும், தமிழக அரசுக்கும் அல்லது எனக்கும் இடையே எந்த தனிப்பட்ட கருத்துவேறுபாடும் இல்லை என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் நடந்த மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பிரதமர் மோடியை சந்திக்காதது ஏன்? கருத்துவேறுபாடா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், பிரதமர் மோடிக்கும், தமிழக அரசுக்கும் அல்லது எனக்கும் இடையே எந்த தனிப்பட்ட கருத்துவேறுபாடும் இல்லை. இனி மேலும் ஏற்படாது என்றார்.

தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபு டெல்லியில் மரணம் அடைந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதுபற்றி தற்போது விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது தொடர்பாக ஏற்கனவே முதல்-அமைச்சர் மூலம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த முறை வரும் போது இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசுவேன்.

தற்போதைய சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். மக்களையும் சந்திக்கலாம். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் கருத்தின் அடிப்படையில் தான் அந்த அரசியல் இயக்கம் வெற்றிபெறுமா? பெறாதா என்பது முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்காமல் திரும்புவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை 30 நிமிடங்கள் சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து பேசினார். இப்போது அவர் பிரதமரை சந்திக்காமலேயே திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews

SCROLL FOR NEXT