அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைந்தன. அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் தரப்பு தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது.
மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.