பூந்தமல்லி:
அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள், ஆலோசனைக்கூட்டம், திருவேற்காடு, வேலப்பன் சாவடி, கீதாஞ்சலி திடலில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேலப்பன் சாவடி மேம்பாலத்தில் பெண்கள் பூரண கும்ப மரியாதை வழங்கினார்கள். அவருக்கு மேள, தாளங்கள் முழங்க வழி எங்கும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
விழா மேடைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் அங்கு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தர்மயுத்தம் தொடங்கி 125 நாட்கள் ஆகி விட்டது என்று கேட்கிறார்கள். நமது பாதை லட்சிய பாதை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்களின் கொள்கை பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்டம் தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம். 5 மாவட்டங்களில் வெற்றி கூட்டங்கள் நடத்தி முடித்து விட்டு தற்போது 6-வது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இங்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
காஞ்சீபுரம், சேலம், திண்டுக்கல், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டத்தில் உள்ள கூட்டங்களை மிஞ்சும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டம் உள்ளது. மேலும் 26 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் அலை, தொண்டர்களின் அலை நம் பக்கம் உள்ளது. 1 ½கோடி தொண்டர்களை கொண்ட எக்கு கோட்டையை நமக்கு உருவாக்கி தந்து உள்ளனர். ஜெயலலிதா 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் அடைந்தார். அதற்கு குழு அமைத்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம்.
கழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது அதனை மீட்க வேண்டும், தற்போது இருக்கும் நிலையை பார்க்கும்போது கழகமும், தொண்டர்களும் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் வாய்ப்பை மக்கள் தந்தார்கள்.
நமது துரதிர்ஷ்டம் ஜெயலலிதா இறந்து விட்டார். அதன்பிறகு அவரது வழியில் ஆட்சியை நல்வழிநடத்தி செல்ல வேண்டும் என்ற போதுதான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அதன் பின் தர்மயுத்தம் தொடங்கப்பட்டது.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டு பணம், தங்கம் கொடுக்கப்பட்டது. இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று மக்கள் முடிவு எடுத்து உள்ளனர்.
இரண்டு அணிகளும் இணைப்பு தேவையா என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த முடிவை யார் சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களே சொல்லி விட்டார்கள். முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இணைப்பு என்பது கிடையாது. நமது அணி சார்பாக பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு இன்றுடன் கலைக்கப்படுகிறது.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. பழைய சகாக்கள் திரும்பி வந்தால் அவர்களை ஜெயலிதாவின் ஆன்மா மன்னிக்கும், திரும்பி வரவில்லை என்றால் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், செய்தி தொடர்பாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.பி.மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் செம்மலை, ஜெ.சி.டி.பிரபாகரன், பி.எச்.மனோஜ்பாண்டியன்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.மணிமாறன், மாவட்ட அவை தலைவர் தி.பா.கண்ணன், முன்னாள் எம்.பி. என்.எஸ்.ஜெகன்நாதன், மாவட்ட பேரவை துணை செயலாளர் கே.ஹரிகுமார், ஒன்றிய அவை தலைவர் டி.பத்மநாபன், ராஜேந்திரன், பாணவேடு தோட்டம், சிவசங்கர்.
சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பால ரமணி, சத்யா. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோலடி டி.மகேந்திரன், இணை செயலாளர் கூ.வெ.பரமசிவம், பரிமேல் அழகன், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்யனார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் லயன் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எஸ்.லஷ்மையா, நேமம் ஊராட்சி செயலாளர் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.