புதுடெல்லி:
எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார்.
இவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ராஷ்டிரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் தி.மு.க. உள்பட 17 கட்சிகள் ஆதரவு அளிக்கிறது.
எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் திடீர் என்று பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தார். இது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சி எற்படுத்தியது.
நிதிஷ்குமார் பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பது வரலாற்று பிழை என்று ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டினார். இதனால் நிதிஷ்குமார், லல்லு பிரசாத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மீராகுமார் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம்யெச்சூரி, உள்பட 50 எம்.பி.க்கள் முன் மொழிந்து கையெழுத்திட்டனர்.
இதில் தி.மு.க. சார்பில் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 3 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்று நடந்த மனு தாக்கல் நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன்சிங், சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் கனிமொழி உள்பட தி.மு.க. எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.