செய்திகள்

ஆளுங்கட்சி தலைவர் மகன் மீது மோசடி புகார்: கேரள சட்டசபையில் கடும் வாக்குவாதம்

கேரள சட்டசபையில் மாநில கம்யூனிஸ்டு செயலாளர் மகன் மீதான மோசடி புகார் குறித்து முதல்வருடன் எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்துவருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியும் தாங்கள் ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்தும் கம்யூனிஸ்டு ஆட்சியை பிடித்தது.

ஆனால் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த உடனேயே கேரளாவில் அந்த கட்சிக்கும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் இடையே அரசியல் மோதல்கள் நடந்தன. இந்த மோதல் பல இடங்களில் கொலையிலும் முடிந்தது.

மேலும் கம்யூனிஸ்டு மந்திரிகள், சபாநாயகர் என்று பலரும் சர்ச்சையில் சிக்கினார்கள். 2 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் நிலையும் உருவானது. இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.

துபாயில் தொழில் நிறுவனம் நடத்தி வரும் பினோய் அங்குள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் ரூ.13 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக அவர் மீது அங்குள்ள கோர்ட்டில் அந்த நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு பினோய் துபாயை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

பினோய் விவகாரம் கேரள சட்டசபையில் எதிரொலித்தது. இந்த விவகாரம் பற்றி சட்டசபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். சபைக்கு தொடர்பு இல்லாத ஒருவர் பற்றி சட்டசபையில் விவாதிக்க வேண்டியது இல்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால் அவருடன் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பினராயி விஜயனுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசியதால் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதற்கிடையில் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகரும் அனுமதி மறுத்தார். இதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான ஓ.ராஜகோபாலும் இந்த வெளிநடப்பில் பங்கேற்றார்.

SCROLL FOR NEXT