செய்திகள்

பாகிஸ்தானுடனான சண்டையை மோடி அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பாகிஸ்தானுடன் நடக்கும் சண்டையை பாரதீய ஜனதா அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன. #modi #Pakistanfires #Abhinandan #kashmirencounter

மாலை மலர்

புதுடெல்லி:

பாகிஸ்தானுடன் நடக்கும் சண்டையை பாரதீய ஜனதா அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ்திவாரி இதுபற்றி கூறியதாவது:-

பாகிஸ்தானுடன் மோதல் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் தனது கட்சிக்கான ஓட்டை வலுப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

சண்டை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கட்சி தலைவர் அமித்ஷா காசீப்பூரில் மீண்டும் பிரதமராக மோடியை தேர்ந்தெடுங்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

விமான பைலட் அபினந்தன் பிடிபட்ட நேரத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சத்தீஸ்காரில் நடந்த பாரதீய ஜனதா அரசியல் கூட்டத்தில் பங்கேற்று பேசிக் கொண்டிருக்கிறார்.

கர்நாடக பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா, மாநிலத்தில் உள்ள 28 தொகுதியில் 22 தொகுதிகள் இந்த சண்டை மூலம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுபற்றி கூறும்போது, பாகிஸ்தானுடன் நடக்கும் சண்டை மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று கூறினார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக நாட்டை வலுப்படுத்த வேண்டிய இந்த நேரத்தில் பிரதமரும், பாரதீய ஜனதாவும் வாக்குச்சாவடிகளை வலுப்படுத்துவதில் குறியாக இருக்கின்றனர்.

பொய்களையும், வியாபார போலி தந்திரங்களையும் பயன்படுத்தி திசை திருப்பும் அரசியலை பாரதீய ஜனதா இப்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் அதிகாரத்தை கடவுளாக நினைக்கிறார்கள். அதுவே அவர்களை விழுங்கிவிடும் என்று கூறினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் தேர்தலை பற்றி மட்டும் சிந்திப்பதை விட்டு விட்டு நாட்டைப்பற்றியும் சிந்தியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. #modi #Pakistanfires #Abhinandan #kashmirencounter