புதுடெல்லி:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து மத வேறுபாடுகளினால் வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், மாணவர்களின் போராட்டத்தின்போது, மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று மாணவர்கள் மற்றும் போலீசாரிடையே ஏற்பட்ட மோதலில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்தித்தனர்.
இவ்விகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் அவர்கள் முறையிட்டனர்.