புதுச்சேரி:
புதுவையில் நேற்று முன்தினம் முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளும் கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதோடு கட்டாய ஹெல்மெட் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து கூறும்போது, போக்குவரத்து சீரமைப்பு குழுவை கூட்டி முடிவு செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.