செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சோனியா, மன்மோகன்சிங், ராகுல் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

துணை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இவரது பெயரை பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூடி தேர்வு செய்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும். மகாத்மா காந்தி- மூதறிஞர் ராஜாஜி ஆகியோரின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

இதன்மூலம் துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஓ பிரையான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா முன்னிலையில் காலை 11.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.