செய்திகள்

டேட்டா வேகத்தில் ஜியோவை முந்திய பாரதி ஏர்டெல்

மொபைல் நெட்வொர்க் டேட்டா வேகங்கள் சார்ந்த ஆய்வு அறிக்கையில் 4ஜி டவுன்லோடு வேகங்கள் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் முதலிடம் பிடித்துள்ளது.

மாலை மலர்

இந்தியாவில் மொபைல் இண்டர்நெட் டவுன்லோடு வேகங்கள் வழங்கும் நிறுவனங்கள் சார்ந்த ஆய்வு அறிக்கையை ஓபன்சிக்னல் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டவுன்லோடு வேகங்களை பொருத்த வரை சராசரியாக நொடிக்கு 9.15 எம்.பி. வேகத்தில் ஏர்டெல் டவுன்லோடு வேகம் இருந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 5.81 எம்.பி.யாகவும், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் முறையே 7.45 எம்பி மற்றும் 7.4 எம்.பி. என்ற அளவில் டேட்டா வேகம் வழங்கியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளானது ஜூன் மற்றும் ஆகஸ்டு மாத வாக்கில் சுமார் ஏழு லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

3ஜி டேட்டா வேகங்கள் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் நொடிக்கு 3.62 எம்.பி. என்ற வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. வோடபன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே 3.12 எம்.பி. மற்றும் 2.6 எம்.பி. வரை வழங்கியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வந்த இலவச சேவைகள் மார்ச் மாதவாக்கில் நிறைவுற்றதைத் தொடர்ந்து ஜியோ எல்டிஇ வேகங்கள் கடந்த ஆறு மாதங்களில் மேம்பட்டிருக்கிறது.

அந்தவகையில் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகங்கள் சராசரியாக 3.9 எம்.பி மற்றும் 58.8 எம்பியாக இருக்கிறது. இது முன்னதாக ஜியோ வழங்கியதை விட 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 11.5 எம்.பி. மற்றும் 9.1 எம்.பி. வரை வழங்கியுள்ளது.