திருமலை:
திருப்பதிக்கு வரும் திவ்ய தரிசன மற்றும் விரைவு தரிசன பக்தர்களுக்கு தேவஸ்தானம் தனித்தனி காத்திருப்பு வரவேற்பு அறையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் இலவச தரிசன பக்தர்களுக்கும் நந்தகம் அருகே வரவேற்பு அறை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இங்கு இலவச தரிசன பக்தர்கள் நுழைந்தவுடன் அவர்களுக்கு டீ, காபி, பால் வழங்குவதுடன் பக்தர்களுக்கு கூடுதல் லட்டு டோக்கன், மானிய விலை லட்டு டோக்கன் வழங்குவதற்கான கவுன்ட்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு எஸ்.வி. அருங்காட்சியகம் எதிரில் தரிசன டோக்கன் வழங்கதனி இடம், அவர்கள் காத்திருக்க தனி அறை மற்றும் நந்தகம் ஓய்வறை அருகில் மினி கல்யாண கட்டா (தலைமுடி காணிக்கை செலுத்துமிடம்) உள்ளிட்டவையும் தேவஸ்தானம் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டன.
தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் இவற்றை திறந்து வைத்தனர். ரூ.1.25 கோடியில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் மாதம் முதல் திவ்ய தரிசனம், விரைவு தரிசன பக்தர்களுக்கு வழங்குவது போல் தர்ம தரிசன பக்தர்களுக்கும் நேர ஒதுக்கீடு முறையை தேவஸ்தானம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.